தமிழ் தலைமைகள் முட்டுக்கொடுத்து கடந்த அரசாங்கத்தால் ஒரு அரசியல் கைதியைக் கூட விடுதலை செய்ய முடியவில்லை. ஆனால், தற்போதைய எமது அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ஷவால் 16 தமிழ் அரசியல் கைதிகள் ஒரே தடவையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் தெரிவிக்கையில் ,
தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு விடயமாக இருந்தாலும் சரி, இராணுவ முகாம் காணிப்பிரச்சினைகள், மேச்சல் தரைப் பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு மிக நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாத அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காகவே நாங்கள் அரசுடன் இணைந்து பயணிக்கின்றோம்.
எங்களுடைய மக்களின் உரிமை சார்ந்த அரசியல் பயணத்தோடு இணைத்து அபிவிருத்தி சார்ந்த அரசியலையும் நாம் முன்னெடுப்போம்.
கிழக்கு மாகாணத்தில் ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பின் ஊடாக எமது உரிமை சார்ந்த அரசியலிற்கு சமாந்தரமாக அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளையும் முன்னேடுப்போம்.
ஆனால், கடந்த அரசை பாதுகாக்கும் வேலைத்திட்டங்களை தான் தமிழ் தலைமைகள் செய்தார்களே ஒழிய மக்களின் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வையோ அபிவிருத்தியையோ பெற்றுகொடுக்க முடியாத நிலமையைத் தான் காணக்கூடியதாக இருந்தது.
அதனால்தான், நான் கடந்த தேர்தலில் அரசுக்கு ஆதரவு வழங்கினேன். மக்களும் எமது மாவட்டத்தில் ஆளும்கட்சி சார்பாக இருவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.
தீர்க்கப்படாமல் இருக்கின்ற அனைத்து பிரச்சினைகளையும் எங்களது காலத்தில் தீர்த்து வைப்பதற்கான முயற்சியை நாம் செய்துவருகின்றோம் நிச்சயமாக செய்துகொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.