
நாடாளுமன்ற உறுப்புரிமை உட்பட லொஹானின் பதவிகள் பறிக்கப்படல் வேண்டும் கஜேந்திரகுமார் எம்.பி. வலியுறுத்தல்!
அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை துன்புறுத்தியமைக்காக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் நாடாளுமன்ற உறுப்புரிமை உட்பட அனைத்துப் பதவிகளும் பறிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறைக்கைதிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற சர்வதேச சட்டங்களான மனித உரிமைகளுக்கான சர்வதேச பிரகடனம், குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சாசனம், சித்திரவதை மற்றும் ஏனைய துன்புறுத்தல்கள், மனிதத்துவம் அற்ற, கீழ்நிலைப்படுத்தும் நடவடிக்கை மற்றும் சித்திரவதைகளிற்கு எதிரான சாசனம் போன்றவற்றில் இலங்கையும் கைச்சாத்திட்டிருக்கின்றது. இந்த பின்புலத்தில், பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகின்றேன்.
குறித்த நபர் இழைத்த குற்றவியல் நடத்தையின் பரிமாணத்தின் அடிப்படையில் அவர் சிறைச்சாலை மற்றும் சிறைக்கைதிகள் விவகார அமைச்சராக இருப்பதற்கு மட்டுமல்ல, எந்தவொரு அமைச்சுப் பதவியில் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலோ இருக்க முடியாதவர் ஆகின்றார். அதன் அடிப்படையில், அவர் எந்தவொரு அமைச்சுப்பதவியிலும் இல்லாது இருப்பதையும் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்படுவதையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ளுமா?
குறித்த நபரின் இந்த செயற்பாடு குறித்தும் மீறப்பட்ட சட்டங்களின் அடிப்படையிலும், அவரை கைது செய்யவும் பொருத்தமானா சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் சட்டமா அதிபருக்கு எந்தவொரு புற அழுத்தமும் வழங்கப்படாது இருப்பதை இந்த அரசு உறுதிப்படுத்துமா?
குறித்த நபரின் சட்டவிரோத நடவடிக்கைகளை அநுராதபுர சிறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தத் தவறியமையால் பயங்கவராத தடுப்புச் சட்டத்தின் பெயரால் அனுராதபுரத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிரிற்கும் பாதுகாப்புக்கும் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டும், சிறைக்கைதிகள் தொடர்பிலான சர்வதேச சட்டமான நெல்சன் மண்டேலா சட்டம் வலியுறுத்துவதன் அடிப்படையிலும், இந்த தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைக்கு எத்வித காலதாமதமும் இன்றி மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை நீதி அமைச்சர் உடனடியாக எடுப்பாரா?
முன்னைய அரசாங்கங்களை போலவே, இந்த அரசாங்கமும் பயங்கவாதத் தடைச்சட்டம் கொடூரமான இயல்புகளை கொண்டுள்ளது என்பதை ஏற்றுள்ளதன் அடிப்படையிலும், இந்த கொடூரமான பயங்கவாதத் தடைசட்டமானது, ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமை நியமங்களின் அடிப்படையிலும் உரிய நடைமுறைகளின் அடிப்படையிலும் வடிவமைக்கப்பட்டு இருந்தால், எந்தவொரு தமிழ் அரசியல் கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டிருக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு, இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க, இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? – என்றார்.