
இலங்கை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி தளர்த்தப்படவிருக்கும் நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதியன்று உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், கடந்த ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதி கொவிட்-19 வைரஸ் தாக்கம் அதிகரித்ததனை அடுத்து போடப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டதனை அடுத்து ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதேநேரம், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி தொடக்கம் இலங்கை அரசாங்கம் வழங்கும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என கூறப்படுகிறது.
இதேவேளை ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் ஆரம்பாகவிருக்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் மேஜர் லீக் டி20 தொடராக இருக்கும் என குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன் பின்னரே மூன்று நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டிகள் நடைபெறுவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மறுபுறம், இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றக்கூடிய வீரர்கள் அனைவரும் கொவிட்-19 வைரஸிற்கான தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஆரம்பமாகவிருக்கும் இலங்கையின் உள்ளூர் போட்டிகள் அனைத்தும், இலங்கையின் புதிய உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பினை பின்பற்றி நடக்கவிருப்பதனால், 2021/22ஆம் ஆண்டின் பருகாலத்திற்கான உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் இலங்கையின் கிரிக்கெட் வீரர்களுக்கு முக்கியத்துவமிக்கதாக பார்க்கப்படுகிறது.
