ஈஸ்டர் தாக்குதல் போன்று இலங்கையில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படக் கூடும் என ஞானசார தேரர் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதற்கு முன்னர் ஹலால் பிரச்சினையை உருவாக்கி சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சாரல் குழு தாக்குதல் தொடர்பில் அதற்கு முன்னரே ஞானசார தேரர் சில விடயங்களை தெரிவித்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து ஞானசார தேரர் வெளியிடும் தகவலின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள டிலான் பெரேரா, அவ்வாறு விசாரணை நடத்தாமல் இருந்தால் அரசாங்கத்தின் மீது அவர் குறை சொல்லும் நிலை ஏற்படுமென குறிப்பிட்டுள்ளார்.