
திலீபனுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட கஜேந்திரன் எம்.பியை இழுத்துச் சென்ற பொலிஸார் வாக்குமூலம்பெற்று பிணையில் விடுவித்தனர்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட நபர்கள் பொலிஸாரால் இழுத்துச்செல்லப்பட்டு, கைதுசெய்யப்பட்டநிலையில், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்டபோதே, அங்கு நின்றிருந்த பொலிஸார், அவரை இழுத்துச்சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றினர். அவருடன் சென்றிருந்த முன்னணியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவரும் ஆதரவாளர் ஒருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்டனர்.
திலீபனின் நினைவிடத்தில் நேற்றுத்தொடக்கம் பொலிஸாரும் படையினரும் கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்ட நபர்கள், நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்த முற்பட்டபோது, பொலிஸார் அதனைத் தடுத்தனர். நீதிமன்றத் தடையுத்தரவின்றி தன்னைத் தடுக்க முடியாது என்று கூறிய கஜேந்திரன், தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்டவேளை, பொலிஸார் அவரை இழுத்துச்சென்று தமது வாகனத்தில் ஏற்றினர். அவருடன் சென்றவர்களையும் கைதுசெய்து வாகனத்தில் ஏற்றி பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டுசென்றனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி சிலரை ஒன்று திரட்டி நினைவேந்தல் நிகழ்வை நடத்தினார் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்ட மூவருக்கும் பி அறிக்கை தயாரிக்கப்பட்ட நிலையில், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மூவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு எதிர்வரும் செப்ரெம்பர் 27ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுமாறு அறிவுறுத்தப்பட்டு அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் கேட்டபோது, “கொரோனா விதிமுறை மீறல் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாலேயே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், எவரையும் நாங்கள் தாக்கவில்லை.” என்று தெரிவித்தனர். இதேவேளை,
திலீபன் நினைவேந்தலை தடுக்கும்பொருட்டு பொலிஸார் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளமையால், அந்தப் பகுதியில் அச்சமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி கோவில் வடக்கு வீதியில், உணவு ஒறுப்பை ஆரம்பித்த தியாக தீபம் திலீபன், 11ஆவது நாளான, செப்ரெம்பர் 26ஆம் திகதி உயிர்நீத்தார். அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில், உணவு ஒறுப்பை ஆரம்பித்த 34ஆவது ஆண்டு நினைவுவாரம் கடந்த 15ஆம் திகதி நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
நல்லூர் நினைவேந்தல் தூபிக்குச்சென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், ஈகைச்சுடரேற்றி திலீபனின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.