
தமிழில்வரும் கடிதங்களுக்கே சபை நடவடிக்கை எடுக்கும்
வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!
வலி.மேற்கு பிரதேச சபைக்கு, அரச தரப்புகளிலிருந்து அனுப்பப்படும் கடிதங்கள் இனிமேல் தமிழ் மொழியிலேயே அனுப்பப்படவேண்டும். தமிழ் மொழியில் அனுப்பப்படும் கடிதங்களுக்கே சபையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலி.மேற்கு பிரதேச சபை அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது, குற்றத்தடுப்பு பிரிவினரால் சிங்கள மொழியில் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில்
விவாதத்துக்கு எடுத்த தவிசாளர், குறித்த கடிதம் சிங்கள மொழியில் உள்ளது. இதனை ஒரு மென்பொருள் மூலம் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்புத்தெரிவித்த சபை உறுப்பினர்கள், இனிமேல் சபைக்கு வரும் கடிதங்கள் தமிழ் மொழியிலேயே பெறப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர். மேலும் சிங்கள மொழியில் வரும் கடிதங்களைத் திருப்பி அனுப்புவது என்றும் உறுப்பினர்கள் தீர்மானித்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஜீவன், தமிழ் மொழியில் தமிழ் உணர்வுக்கு அப்பால் உறுப்பினர்களுக்கு சிங்கள மொழியில் போதிய தெளிவின்மை உள்ளது. எனவே, குறித்த கடிதங்களை தமிழ் மொழியில் பெறவேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்குப் பதில் கருத்துத் தெரிவித்த சங்கானை பிரதேச ஈ.பி.டி.பி. உறுப்பினர், ஏன் தமிழ் மொழியில் பெற வேண்டும்?. அதற்குப் பதிலாக இங்குள்ள மொழிபெயர்ப்பாளர்கள் மூலமாக மொழி பெயர்க்கலாம் என்றார். இதற்கு சக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட தவிசாளர், இனிமேல் அரசு மூலமாக வரும் அனைத்துக் கடிதங்களும் தமிழ் மொழியில் வந்தால் மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இலங்கை அரசமைப்பில் தமிழ்மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மொழி. எனவே, தமிழ் மொழியிலேயே இனிமேல் கடிதங்களைப் பெறுவது என்றும் இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவிப்பது என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.