
கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்பிவைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களையும் உதவிகளையும் வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி கோரி, தமிழக சட்டப்பேரவையில் கடந்த 29ஆம் திகதி விசேட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனுமதி கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கைக்கு அனுமதி அளித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு தமிழக அரசு வழங்கும் உதவிகள் குறித்து எடுத்துரைத்தனர்.
அதற்கு இலங்கை அரசு அனுமதி கொடுத்துள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்திய அரசு இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை மனிதாபிமான அடிப்படையில் வழங்கி வரும் நிலையில், தமிழக அரசு வழங்க கூடிய உதவி பொருட்களும் இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக ஒன்றிணைக்கப்பட்டு இலங்கையிடம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாடு அரசு நிவாரண பொருட்களை வழங்குவதற்கும் அதனை விநியோகிக்கப்படும் நடவடிக்கைகளில் மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஒன்றிணைந்து செயற்படலாம் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.