அம்பாறை மாவட்டத்தில் மண் அகழ்வு; நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில்?

அம்பாறை, கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக வாய்க்காலை பெரிதாக்க வேண்டும் என்ற போர்வையில் மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதாகவும் கனரக வாகனங்களைக் கொண்டு வெளி மாவட்டங்களுக்கு மண் ஏற்றபடுவதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மண் ஏற்றிச் செல்லும் பாரவூர்தியானது அதிவேகத்தில் பாதை ஊடாக செல்வதனால் பலர் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் எந்தவித பிரயோசனமும் இல்லை என்றும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தலைமையிலேயே மண் அகழ்வு இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.

மண் அகழ்வு இடம்பெறுகின்ற இடத்தில் காடுகள் அளித்து வருவதால் வெள்ளம் ஏற்படும்போது அந்த கிராமமே மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தூர்வார் எனும் பெயரில் ஒரு நாளைக்கு 500 தொடக்கம் 600 இற்கு மேற்பட்ட மண் குவியல்களை எடுத்து வருகின்றனர். சுமார் 60 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் ரூபா அளவில் கஞ்சிகுடிச்சாறு மண் வெளி மாவட்டங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றப்பட்டு வருவதையும் காணக் கூடியதாக இருக்கின்றது என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோத மண் அகழ்வுக்கு பலதரப்பட்ட அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாகவும் உடனடியாக இந்த மண் சுரண்டலை நிறுத்தி கோரிக்கை விடுத்துள்ளதுடன் குறித்த மண் அகழ்வு நிறுத்தப்படாத பட்சத்தில் வீதியில் இறங்கி போராட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த காலங்களில் தமிழர்களின் ஒரு அடையாளமாக காணப்படும் கஞ்சிகுடிச்சாறு போராட்ட வரலாற்றில் யாராலும் மறக்க முடியாத ஒரு பிரதேசமாக காணப்படுவதால் குறித்த மண் வளத்தையும் அப்பிரதேச மக்களையும் உடனடியாக பாதுகாக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *