
நாட்டை முழுமையாக திறக்கவே வேண்டாம்! சுகாதாரத் தரப்பு பரிந்துரை!
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்கும்போது, நாட்டை முழுமையாகத் திறக்க வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஜெனரல் ஹேமந்த ஹேரத் ஊடகங்களுக்கு நேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டை முழுமையாக ஒரே நேரத்தில் திறப்பதற்குப் பரிந்துரைக்கப்படவில்லை. நாடு முழுமையாகத் திறக்கப்படுமானால், நிலைமை இன்னும் மோசமாகும்.
எனவே, படிப்படியாக நாட்டைத் திறப்பதே மிகவும் பொருத்தமானது. இதன்மூலமாக, கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் காரணிகள் உள்ளனவா என்று நாம் அவதானிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், இதுவரையான முடிவின்படி எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படுகின்றது. முதலாம் திகதிக்குப் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிக்கும் வாய்ப்பு இல்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு முன்னரே அறிவித்துள்ளது.
இந்தநிலையிலேயே, ஊரடங்கை நீக்கும்போது நாட்டை முழுமையாகத் திறக்க வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

