அடிப்படை வசதிகூட இல்லை- விழிநீர் சிந்தி அனுபவிக்கும் இன்னல்களுக்கு தீர்வு எங்கே?

எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி லயன் என்ற இருட்டறைக்குள் இன்னமும் வலி சுமந்த வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றோம். மலைநாட்டில் வாழ்ந்தாலும் குடிநீரை பெறுவதற்குகூட ஆயிரம் போராட்டங்கள். எந்நேரத்தில் வேண்டுமானாலும் லயன்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இவ்வாறு உயிரை கையில் பிடித்துக்கொண்டே வாழ்கின்றோம். வருமானம் இல்லை. முன்னேற வேறு வழியும் இல்லை என விழிநீர் சிந்தியப்படியே தாம் அனுபவிக்கும் இன்னல்களையும், உள்ளக்குமுறல்களையும் வெளிப்படுத்தினர் கண்டி கலஹா குறுப், அப்பர் கலஹா தோட்டத்தில் வாழும் மக்கள்.

மேலும் தெரிவிக்கையில்,

கொட்டும் மழையிலும், சுட்டெரிக்கும் வெளியிலும், சுழன்றடிக்கும் சூறாவளிலும் தமது உயிரையே பணயம் வைத்து, அட்டைக்கடி, குளவிக்கொட்டு, சிறுத்தை தாக்குதலென சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை தோளில் சுமந்தவர்கள் தான் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள்.

இன்றளவிலும் ஏற்றுமதி பொருளாதாரத்துக்கு அவர்கள் பெரிதும் பங்களிப்பு செய்கின்றனர். கொரோனா நெருக்கடி காலத்திலும் உழைக்கின்றனர்.

ஆனால் அவர்களின் வாழ்வு இன்னும் மேம்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும். கலஹா அப்பர் தோட்ட மக்களின் வாழ்வு இதற்கு சான்றாகும் என மலையக சிவில் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட பகுதியிலேயே கலஹா இருக்கின்றது. அப்பகுதியிலுள்ள ஒரு தோட்டமே அப்பர் கலஹாவாகும். நான்கு லயன் குடியிருப்புகள் உள்ளன. சுமார் 45 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

தேயிலை தொழில்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்தே வாழ்வாதாரத்தை சமாளிக்கின்றனர். குறிப்பிட்டுள் கூறுமளவுக்கு உப தொழில்கள் எதுவும் அப்பகுதியில் இல்லை.

” தேயிலை மலைகள் காடுகளாகியுள்ளன. மிருகங்களின் இருப்பிடமாக மாறியுள்ளன. லயன் வீடுகள் அன்று இருந்த நிலையில்தான் உள்ளன. இன்னும் திருத்தப்படவில்லை, குடிநீர் வசதிகூட இல்லை. ” என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இன்றைய நவீன யுகத்திலும் அடிப்படை வசதிகள்கூட இன்றி பெருந்தோட்ட மக்கள் ‘வலி ’ சுமந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு அவர்களின் சாட்சி ஒரு சான்று என மலையக சிவில் சமூக பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மலையகத்தில் அசுர வேகத்தில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக மார்தட்டுபவர்கள், நகரப் பகுதிகளை அண்டியுள்ள தோட்டங்களை விடுத்து, தூர இடங்களிலுள்ள தோட்டங்களுக்கு சென்றால், அவலக்காட்சிகளை காணலாம் என்பது இதன்மூலம் உறுதியாகின்றது.

வைத்தியசாலை வசதி இல்லை. தீவிர நோயெனில் பேராதனை அல்லது கண்டிக்கு பலமைல் தூரம் செல்ல வேண்டிய நிலைமை. எனவே, எமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுங்கள். தனிவீடுகளை அமைத்து தாருங்கள் – எனவும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *