இடைக்கால அரசில் பதவிகளை ஏற்காதிருக்க மொட்டு கட்சி முடிவு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் பொருளாதார நெருக்கடியும் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து, இக்கட்டான திசையை நோக்கி நாடு பயணித்துக்கொண்டிருக்கின்றது.

இந்நெருக்கடி நிலைமையிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன் ஓர் அங்கமாக இடைக்கால அரசமைக்கும் திட்டத்துக்கு ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொள்கை அளவில் இணக்கம் வெளியிட்டுள்ளது.

இது சம்பந்தமாக இறுதி முடிவு எட்டப்படவில்லை. மொட்டு கட்சியின் உறுதியான நிலைப்பாடும் தெரிவிக்கப்படவில்லை.

ஆளுங்கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (02) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அதன் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, பிரதான செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், ஊடக செயலாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன, அமைச்சர் ரமேஷ் பத்திர ஆகியோரும் –

சுயாதீன அணிகளின் சார்பில் சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா, அநுரபிரியதர்சன யாப்பா, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில மற்றும் டிரான் அலஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளின் உறுப்பினர்களுக்கும் இடையில் ஏப்ரல் 29 ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின்போது, சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டது.

இது சம்பந்தமாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன், அதற்காக ஐவரடங்கிய பேச்சு குழுவொன்று அமைக்கப்பட்டது.

இதன் பிரகாரமே ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன், உத்தேச சர்வக்கட்சி இடைக்கால அரசு சம்பந்தமாக பேச்சு நடத்தப்பட்டது.

ஜனாதிபதி பதவியில் கோட்டாபய ராஜபக்ச நீடிக்கும் நிலையில், புதிய பிரதமரின்கீழ் இடைக்கால அரசு அமைக்கும் திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி போன்ற பிரதான எதிர்க்கட்சிகள் நிராகரித்துவிட்டன.

ஜனாதிபதியும் பதவி விலகியே ஆக வேண்டும் என்பதில் அக்கட்சிகள் விடாப்பிடியாக நிற்கின்றன.

தன்னெழுச்சி போராட்டத்தில் பங்கேற்றுள்ள மக்களின் ஒருமித்த நிலைப்பாடும் இதுவாகவே உள்ளது.

எனவே, இந்த தேசிய இணக்கப்பாட்டு அரசுக்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பை பெறுவதில் உள்ள நெருக்கடி நிலை குறித்தும் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.

“நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கவே உத்தேசிக்கப்பட்டது.

அமைச்சரவையில் அங்கம் வகித்து செயற்பட விருப்பம் இல்லாதவர்கள், தேசிய சபை ஊடாக, நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கலாம்.” – என யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *