தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், நேற்று வியாழக்கிழமை திட்டமிட்டு கைது செய்யப்பட்டதாகவும், தனி ஒருவனாக அவர்; அந்த இடத்தில் சென்றால் கூட சட்டத்தை மீறியதாக சித்தரிக்கப்படுகின்றது. ஆனால், சிறைச்சாலைக்குள் சென்று கைத்துப்பாக்கியை தலையில் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்தவர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவுடன் கட்சியின் செயலர் கைதுசெய்யப்பட்டிருந்தால் அது ஏற்றுக்கொள்ளக் கூடியது எனவும், ஆனால் அவ்வாறான உத்தரவுகள் இன்றி கைதுசெய்வது என்பது எமது உரிமைகளை பறிக்கும் விடயமாக அது அமையும் எனவும், யாழ். பொலிஸார் அடாவடித் தனமாக செயற்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றுவதற்கு தயாராகும்போது அங்கு நின்ற பொலிஸார் தடுத்ததாகவும், அப்போது அவர்களிடம் கஜேந்திரன் நீதிமன்ற தடை உத்தரவு இருக்கின்றதா என்றும்; நீதிமன்ற தடையுத்தரவை காண்பிக்குமாரும் கேட்டுள்ளார். நீதிமன்ற தடையுத்தரவை நாங்கள் மதிக்கிறோம் ஆனால், எங்கள் உரிமையை மீறும் உங்களது செயலை ஏற்கமுடியாது என தெரிவித்துள்ளார்.
நினைவிடத்திற்குள்ளே செல்ல அனுமதிக்காத நிலையில், நினைவிடத்துக்கு முன்பாக அவர், சுடரேற்றிய போது அங்கு இருந்த பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக அவரை தாக்கி இழுத்து சென்றதுடன், அந்த இடத்தில் பொலிஸார் அவருடன் முரண்பட்டபோது, என்ன நடைபெறுகின்றது என நியாயம் கேட்க முற்பட்டவர்களையும் சேர்த்து கைது செய்தமையை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
மேலும், அங்கு அவர் தனியாகத்தான் சுடரேற்ற சென்று இருந்தார். ஆனால், கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த நாட்டின் ஜனாதிபதி ஐ.நா.விற்கு சென்று தாங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த போகின்றோம் என கூறுகிறார். ஆனால் இங்கு பொலிஸாரின் அராஜம் நடந்து கொண்டிருக்கின்றது.
தனி ஒருவனாக அவர்; அந்த இடத்தில் சென்றால் கூட சட்டத்தை மீறியதாக சித்தரிக்கப்படுகின்றது. ஆனால், சிறைச்சாலைக்குள் சென்று கைத்துப்பாக்கியை தலையில் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்தவர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கொவிட் பரவும் என்பதற்காகத் தான் கஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றால், அவர் அங்கு சென்ற உடனேயே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் நினைவு கூருவதற்காக தீபம் ஏற்றும்போதே கைது செய்தார் என்றும் கஜேந்திரன் கைது செய்யப்பட்டதற்கு கொவிட் காரணம் அல்ல நினைவுகூருவது தான் காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், கொவிட் பரவுகிறது என்று காரணம் காட்டும் பொலிஸார், அந்த இடத்தில் வந்திருந்த அனைவருமே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லாது கஜேந்திரனை மட்டுமே கைது செய்து, பொலிஸார் தமது அராஜகத்தை இதன் மூலம் உலகுக்கு காட்டியுள்ளனர்.
மேலும். கஜேந்திரன் பொலிஸார் கூறும் வகையில் எந்தவொரு கொரோனா விதிமுறைகளையும் மீறவில்லை என்றும், கொவிட் விதிமுறைகளை மீறியவர்கள் பொலிஸார் தான் என்றும், பொலிஸார் மேலும் இவர் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களையும், இனவாதத்தின் அடிப்படையில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கைவிடாது தொடர்ந்தால், எங்கள் அமைப்பும் சட்ட ரீதியாக, யாழ்ப்பாண ழுடுஊ பிரசாத் பெணான்டோ அவருக்கு எதிராகவும், இச் சம்பவத்தில் அராஜகமாக நடந்து கொண்ட பொலிஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
ஆனால், யாழ்ப்பாண பிரசாத் பெணான்டோ எங்கள் அமைப்பின் மீது இத்தோடு 4 ஆவது தடவை சட்டவிரோமாக மோதியிருக்கிறாரர். ஆகவே. இவருடைய செயற்பாடுகளை நாங்கள் தொடர்ந்தும் ஏற்கப்போவதில்லை. அவர் சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் அடிப்படை உரிமைமீறல் தொடர்பாக சட்டநடவடிக்கையும் எடுக்க முடிவுசெய்துள்ளோம். ஏனெனில், அவருடைய செயற்பாடுகள் அனைத்தும் சட்டவிரோதமானது மட்டுமன்றி, இனவாத நோக்கங்களோடு முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் கலந்து கொண்டிருந்தமை குகறிப்பிடத்தக்கது.