மதுபானசாலையில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு!

மதுபானசாலையில் எழுந்த வாய்த்தர்க்கம் போத்தல் குத்தில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை வெளி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் நேற்று (திங்கட்கிழமை) மது அருந்திய இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கம் முற்றி இரு குழுவினரும் கைக்கலப்பில் ஈடுபட்டனர். அதன்போது ஒருவர் மதுபான போத்தல் ஒன்றினை உடைத்து இளைஞன் ஒருவரை குத்தியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அக்குழு அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் அங்கிருந்தவர்கள் போத்தல் குத்துக்கு இலக்கான இளைஞனை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வைத்திய சாலையில் இளைஞன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

யாழ்ப்பாணம் திக்கம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த குணசேகரன் குணசோதி (வயது 25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், நான்கு சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *