அபிவிருத்தியை ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை – காரைதீவில் அமைச்சர் விமலவீர

(அரவி வேதநாயகம்)
எந்தவொரு இக்கட்டான தருணத்திலும் நாட்டின் அபிவிருத்திப் பணிகளை அரசு ஒருபோதும் நிறுத்தவில்லையென இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார். காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற “கம சகம பிலிசண்டக் – 2022” நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

2022 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை ஆராயும் “கம சமக பிலிசண்டக் – 2022” கலந்துரையாடல் நிகழ்வு இன்று (24) காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்ட பராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான விமலவீர திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

இவ்வாண்டிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கிராம சேவகர் பிரிவுகள் தோறும் இரண்டு மில்லியன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இடம்பெற்று வருகையில், வரும் ஆண்டிற்கான அபிவிருத்திக்கான ஏற்பாடுகளில் இப்போதிருந்தே அரசு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமன்றி அதற்கான முன்மொழிவுகள் மூன்று மில்லியன்களாகும். இவற்றில் வாழ்வாதார அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும் அதேநேரம் உட்கட்டுமானங்களும் அபிவிருத்தி செய்யப்படும். எது எவ்வாறாயினும் மக்களின் தேவைக்கேற்ப அபிவிருத்தியை வழங்குவதே அரசின் நோக்கமாகும். கொவிட் தொற்றினால் அரசு பல வழிகளிலும் வருமானங்களை இழந்துள்ளபோதும், பலதுறைகளில் பணியாற்றுவோர் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கின்றபோதிலும் மக்களுக்குகான அபிவிருத்திப்பணிகளை தங்குதடையின்றி மேற்கொள்வதற்கு அரசு திடசங்கற்பம் கொண்டுள்ளது என்றார்.

கரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களால் கிராமசேவகர் பிரிவுகள்தோறும் இனங்காணப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகள் அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்படதுடன் அமைச்சரால் அவற்றிற்கான அனுமதிகளும் வழங்கப்பட்டது. இவற்றிற்கு மேலதிகமாக காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீனவர்களின் நீண்டகால தேவையாக இருந்துவரும் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான கோரிக்கையும் பிரதேச செயலாளர் சி. ஜெகராஜன் அவர்களால் முன்வைக்கப்பட்து. அதனை அமைப்பதற்குரிய ஏற்பாடுகளை உனடியாக எடுத்து அமைத்து தருவதாக அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி, தபாலகத்தினர் ஆகியோரின் கோரிக்கைகளையும் நிறைவேற்றித்தருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ.மோகனகுமார், உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன், அமைச்சரின் இணைப்பாளர்களான என்.ஜீவராசா, ஏ.எம்.ஜாகிர், திணைக்களங்களின் பிரதிநிதிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களென பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *