மன்னாரில் திலீபனின் நினைவு நிகழ்வுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெற இருப்பதாக கூறி, அந்நிகழ்விற்கு தடை உத்தரவை பிறப்பிக்குமாறு மன்னார் நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

அதாவது, தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன்தான், குறித்த நினைவேந்தலை மேற்கொள்ள உள்ளதாக கூறி வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சிவகரனுக்கு கிடைக்கப்பெற்ற அழைப்பின் அடிப்படையில், நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாகி இருந்தார்.

இதன்போது,  சிவகரன் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.சிராய்வா மற்றும் சட்டத்தரணி அன்ரனி றொமோசன் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள், தமது சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

அதாவது, மன்னர் பொலிஸார் தாக்கல் செய்தது போல் மக்களை ஒன்று சேர்த்து நினைவேந்தலை நடத்த எவ்வித ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் பொலிஸார் கற்பனையில் பொய்யான வழக்கை மன்றில் தாக்கல் செய்துள்ளனர் எனவும் சமர்ப்பணத்தை சட்டத்தரணிகள் முன்வைத்தனர்.

ஆகவே, பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், “சிவகரன் என்பவர் எதிர்வரும் 26ஆம் திகதி நித்திலம் பதிப்பகத்தில் மக்களை ஒன்று கூட்டி எவ்வித ஒன்று கூடலையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆகவே, தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுடன்  எதிர்வரும் 1 ஆம் திகதி வழக்கை ஒத்தி வைக்கின்றேன்” என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *