மக்களின் பிரச்சனைகள் பல இருக்கும்போது ’மதில்’ தொடர்பில் ஒன்றரை மணிநேரம் விவாதித்த வலி.மேற்கு பிரதேச சபை!

சபையில் கதைக்காத விடயம் அறிக்கையில் வந்தது எப்படி! வலி.மேற்கு பிரதேச சபையில் ஒன்றரை மணிநேரம் அமளி!

சபையில் விவாதிக்கப்படாத விடயம் எவ்வாறு அறிக்கையில் உள்வாங்கப்பட்டது என்று சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால் வலிகாமம் மேற்கு பிரதேச சபை அமர்வில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. வலி.மேற்கு பிரதேச சபை அமர்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. பிரதேச சபையின் அனுமதி பெறாது மதில் ஒன்று அமைக்கப்பட்டமை தொடர்பான விடயத்திலேயே உறுப்பினர்கள் காரசாரமான கருத்துக்களை முன்வைத்தனர்.

தொல்புரம் பகுதியில் உள்ள காணி ஒன்றில் சபையின் அனுமதி பெறாது அமைக்கப்பட்ட மதில் ஒன்றை இடிக்க வேண்டும் என்று பிரதேச சபையால் காணி உரிமையாளருக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆயினும் இது தொடர்பாக வீடமைப்பு குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் சபைக்கு தெரியப்படுத்தப்படவில்லை.

இது தொடர்பாக சபையில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஜெயந்தன், இந்த அறிக்கையில் உள்ள விடயம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. சபையில் விவாதிக்காமல் எவ்வாறு அதை அறிக்கையில் உள்ளடக்கினீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
சபைத் தவிசாளரும், செயலாளரும் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை.

அங்கு கருத்துத் தெரிவித் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜீவன், அறிக்கையைச் சரிபார்க்காது கையெப்பம் இட்டிருக்கிறீர்களா? சபையில் பேசப்படாத விடயம் எவ்வாறு அறிக்கையில் உள்ளது?.
சபையில் விவாதமோ, பிரேரணையோ கொண்டுவராது காணி உரிமையாளருக்குக் கடிதம் அனுப்பப்பட்டமை தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்,இவ்வாறு தான் சரியாகப் பார்க்காது கையொப்பம் இடுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அதன்பின்னர் கருத்துத் தெரிவித்த சபைத் தவிசாளர், இது அறிக்கை எழுதும்போது ஏற்பட்ட தவறு. அந்த விடயத்தை அறிக்கையில் இருந்து நீக்குகின்றோம். இது தொடர்பான விடயத்தில் உரிய தரப்பினரை அழைத்து மீண்டும் ஒரு கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த விடயத்துக்காக நேற்று நடந்த அமர்வில் சுமார் ஒன்றரை மணிநேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அது தொடர்பில் பல உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர். முக்கியமான பிரச்சினைகள் பல இருக்கும்போது, இவ்வாறு சிறு விடயங்களுக்கு மணித்தியாலக் கணக்கில் விவாதிப்பது பொருத்தமற்றது என்று அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *