
யாழ்.பொலிஸாரே தவறிழைத்தனர் கஜேந்திரகுமார் தெரிவிப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றியே நினைவஞ்சலி செய்ய முற்பட்டார். பொலிஸாருக் வெளியைக்கூட அவர் பின்பற்றியிருந்தார். ஆனால், பொலிஸாரே தனிமைப்படுத்தல் விதிகளை மீறிச் செயற்பட்டனர். இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நல்லூரில் தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில், அஞ்சலி செலுத்த முயன்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில்,
திலீபனின் நினைவுத் தூபிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தனியாகத்தான் சென்றார். மக்களை அணிதிரட்டவில்லை. வருடாந்தம் குடும்பத்தோடு அமைதியாக அஞ்சலி செலுத்துவார். அதுபோல இந்தமுறையும் சில நாள்களாக அஞ்சலி செலுத்திவந்தார்.
ஆனால் அஞ்சலி செலுத்துவதைப் பொலிஸார் தடுத்தனர். எதற்காக தடுக்கிறீர்கள்? நீதிமன்றத் தடை உத்தரவு உள்ளதா? என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், பொலிஸாரிடம் வினவினார். எனினும், தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரை நினைவேந்த முடியாது என்றுகூறியே அந்த இடத்தில் கஜேந்திரனை பொலிஸார் கைதுசெய்தனர். எனினும் கஜேந்திரன் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்படும் நேரத்தில் “நினைவுகூருவது தவறு என நாங்கள் வழக்குத் தாக்கல் செய்யவில்லை, கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாலே கைது செய்தோம்” என பொலிஸார் கூறினர்.
அதுமட்டுமன்றி, அராஜகமாக கஜேந்திரனின் உடலை பிடித்து, காலால் தட்டி கலவரம் போன்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். அவர் கைதுசெய்யப்பட்டதை அறிந்து அந்த இடத்துக்குச் சென்ற எமது கட்சியின் இரு பெண் உறுப்பினர்கள் பொலிஸாரால் சட்டவிரோதமாகக் கையாளப்பட்டனர்.
இந்த விடயத்தில், யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெனான்டோ மற்றும் நேற்றைய சம்பவத்தோடு தொடர்புடைய ஏனைய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம்.
27 ஆம் திகதி பொலிஸாரின் நடவடிக்கைகளை பொறுத்து எமது நடவடிக்கைகள் தொடரும். இது தொடர்பில் அடிப்படை மனித உரிமைகள் மீறல் சம்பந்தமாக வழக்குத்தாக்கல் செய்வது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
சபாநாயகருக்குத் தெரியாமல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கஜேந்திரனின் சிறப்புரிமை தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளோம். சட்டரீதியான ஆலோசனைகளையும் பெறவுள்ளோம். – என்றார்.




