துப்பாக்கிச்சூடு: பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் -11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 16 பேர் காயம்!

பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாட்டில் 16 பேர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் காவலரண் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 11 .30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த காவலரணில் கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பொலிஸார் அப்பகுதி வழியாக தலைக்கவசம் (ஹெல்மெட் ) அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது சம்பவ இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், இதனை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச்சூடும் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் ஊடகவியலாளர் உட்பட் 10இற்கும் மேற்பட்ட பொலிஸார் பொதுமக்கள் என 16 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஆராய கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கமல் சில்வா உள்ளிட்ட பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் விசாரணையினை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *