வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பால்மா உதவி முகாமையாளரின் அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இரகசியத்தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதையடுத்து, நுகர்வோர் பாதுகாப்பு பொறுப்பதிகாரியிடம் முன்வைக்கப்பட்ட இத்தகவலை சதொச விற்பனை நிலைய உதவி முகாமையாளருக்கு தெரியப்படுத்திய நுகர்வோர் பாதுகாப்பு பொறுப்பதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரச அதிபரை கேட்டுக்கொள்வதாக சாந்தசோலை கிராம மகளிர் அமைப்புத்தலைவி தெரிவித்துள்ளார் .
இவ் விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,
இன்றையதினம் சதொசவில் பால்மா விற்பனைக்கு வழங்கப்படவில்லை எனினும் உதவி முகாமையாளரின் அலுவலகத்தில் மறைத்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களினால் கிடைத்த முறைப்பாடு தொடர்பாக வவுனியா மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு பொறுப்பதிகாரிக்கு இரகசியத் தகவலை வழங்கியிருந்தேன் .
எனினும் சில நிமிடங்களில் பால்மா உட்பட பதுக்கி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சில உடனடியாக உதவி முகாமையாளரின் அலுவலகத்திலிருந்து விற்பனை செய்வதற்காக சதொசவிற்கு உதவி முகாமையாளரினால் வெளியே எடுத்து வரப்பட்டுள்ளது .
எனவே நுகர்வோர் பாதுகாப்பு பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்ட இரகசியத்தகவல் எவ்வாறு உதவி முகாமையாளருக்கு கிடைத்தது.
இவ்விடயத்தில் தொடர்புபட்ட இரு உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமை குடும்பம் மற்றும் சிறுவர்கள் பலர் பல்வேறு சொல்லொண்ணா துயரங்களையும் அனுபவித்து வருகின்றனர் .
எனவே இவ்வாறான உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையினை எடுத்து இனிவரும் காலங்களில் அரச சதொச விற்பனை நிலையத்தில் மக்களுக்கு சலுகை விலைகளில் நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு மாவட்ட அரச அதிபர் உடன் நடவடிக்கை எடுக்குமாறு மேலும் தெரிவித்துள்ளார் .

