ராஜபக்ஷர்களின் அரசாங்கம் நாட்டுக்கு என்ன செய்துள்ளது? பிமல் ரத்னாயக்க சாட்டை

தற்போது எதுவுமே செய்ய முடியாமல் உள்ள பொலிஸாருக்கு பதிலாக இராணுவத்தை கொண்டு வருவதற்காகவே அரசாங்கமானது அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (7) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டாங்களை இராணுவத்தினரைக் கொண்டு நசுக்குவதற்காகவே அவசரகால சட்டத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

ரம்புக்கனை சம்பவத்தின்போதும்கூட இராணுவத்துடன் தொடர்புடைய தற்போது பொலிஸ் கடமைகளை ஆற்றிவரும் நபரே முன்னின்று செயற்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.

மக்களுடன் சுமூகமான உறவை பேண முடியாது ஒரு குழுவினருக்கு அதிகாரங்களை வழங்கும்போது அது நாட்டின் அமைதியின்மைக்கு வழிவகுக்கும்.

இராணுவத்தினரை ஈடுபடுத்தி நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை சீர்குலைக்க வேண்டாம் என்றே அரசாங்கத்திடம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம். ஏனெனில் இவ்வாறான செயற்பாடு நாட்டை பாரிய அழிவுக்குக் கொண்டு செல்லும்.

ராஜபக்ஷர்களின் அரசாங்கம் நாட்டுக்கு என்ன செய்துள்ளது?

ஜனாதிபதி பதவி என்பது ராஜபக்ஷர்களின் குடும்பத்திடம் இருக்க வேண்டும் என்றே ராஜபக்ஷர்களின் குடும்பம் விரும்புகின்றது.

2005ஆம் ஆண்டு முதல் இதுவே அவர்களது தேவைப்பாடாக உள்ளது.

ஆட்சிபலத்தை விட்டுவிட்டு அவர்களால் வீட்டில் இருக்க முடியாத நிலைமையே தற்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அரசியல் செய்பவர்களுக்கு வெற்றிபெற்று நாட்டை ஆளும் ஆளுமை இருப்பதை போன்று தோல்வியடைந்தால் வீட்டில் இருக்கக்கூடிய வகையிலான தன்மையும் இருக்க வேண்டும்.

தாம் ஒருவேளை தோல்வியடைந்தால் இதுவரை செய்த ஊழல் மோசடிகள் வெளிக்கொணரப்படும் என்பதை ராஜபக்ஷர்கள் நன்கு அறிவர்.

2015ஆம் ஆண்டு அவர்கள் தோல்வியயை சந்தித்தப்போது முதல் ஆறுமாதங்களில் அவர்கள் எவ்வாறான சவால்களை எதிர்கொண்டார்கள் என்று முழு நாட்டு மக்களும் நன்கு அறிவர் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *