தேசிய வளங்களை கொள்ளையர்களுக்கு விற்பனை செய்யும் முகமாக அரசு கொண்டுவரும் தேச துரோகத் திட்டத்திற்கு எதிராக தெருவில் இறங்கி போராட்டத்தை மேற்கொள்ள போவதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இது குறித்த அவர் மேலும் கூறியதாவது,
சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய துரோகம் யுகதனவ் மின்நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவன கொள்ளையர்களுக்கு விற்பனை செய்தமை ஆகும். இந்த நாடு மிகப்பெரிய இனத்துரோகம் மற்றும் தேசத்துரோக செயலை செய்துள்ளது.
நாட்டின் வளங்களை, சொத்துக்களை தங்களது சொந்த சொத்துக்கள் போல வெளிநாட்டு கொள்ளையர்களுக்கு விற்பனை செய்யும் இந்த தேச துரோக செயலை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்.
மேலும், கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் சுகாதார அதிகாரிகளின் அனுமதி ஆலோசனைகளுக்கு ஏற்ப மக்களின் ஆரோக்கியத்திற்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தெருவில் இறங்கி போராடி இத்தகைய சதி திட்டங்களை தோற்கடிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.





