மன்னார் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வீதியில், உலரவிடப்பட்ட வலையில் சிக்கிய கர்ப்பிணி தாயொருவர் விபத்துக்குள்ளாகி உள்ளதோடு, வலைகளை உலரவிட்ட இரு மீனவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கட்டு கொட்டு ,ஜீவபுரம், ஜிம்றோன் நகர் ,சாந்திபுரம் போன்ற பல பகுதிகளில் ஒரு சில மீனவர்கள் வீதிகளில் தாங்கள் பாவித்த வலைகளை பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது உலரவிடுதால் தொடர்சியாக விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது.
பல முறை மீனவர்களுக்கான அறிவிப்புக்கள் வழங்கப்பட்ட நிலையிலும், குறித்த மீனவர்களின் பொறுப்பற்ற சில செயற்பாட்டால் நேற்றைய தினம் இரவு மோட்டர் சைக்கிளில் பயனித்த தம்பதியினர் விபத்தில் சிக்கி கடுமையான காயங்களுடன் மன்னார் பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தொடர்சியாக சமூக பொறுப்பின்றி வீதிகளில் வலைகளை உலரவிடும் மீனவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவ்வாறு வீதிகளில் உலரவிடப்பட்ட வலைகளை உடனடியாக அப்புறப்படுத்தி கையகப்படுத்துமாறும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதை அடுத்து நேற்றைய சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு மீனவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தொடர்சியாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் மீனவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் விபத்தில் சிக்கிய பெண் நான்கு மாத கர்ப்பினி என்பதுடன் சிறு குழந்தை ஒன்றும் விபத்தில் சிக்கி காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





