திலீபனுக்குத் தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லைதமிழருக்கு என்று புறம்பான கொவிட் விதிமுறைகள் உள்ளனவா?தவிசாளர் நிரோஷ் கேள்வி

திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இது தான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டினார்.

தியாகி திலீpபனின் 34 ஆவது நினைவு தினம் இன்று ஆகும். அவர் உண்ணாநோன்பிருந்த இடத்தில் தமிழ் மக்கள் அஞ்சலிப்பது தேசியக்கடமையாக இருக்கின்றது. ஆனால் தமிழர்களான நாம் தியாகி திலீpபனின் சிலைக்கு அண்மையில் கூட செல்ல முடியாதவர்களாகத் தடுக்கப்பட்டுள்ளோம். ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அஞ்சலித்தமைக்காக தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் பிரகாரம் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறாக இராணுவமும் பொலிசாரும் நினைவுகூர்தல் சுதந்திரத்திற்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா சுடப்பட்டு 62 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். அந் நினைவு கூர்தல் பெருமளவானோரின் பங்குபற்றுதலுடன் நித்தம்பூவ கொரெகொல்ல பண்டாரநாயக்கா சமாதியில் இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் பங்காளிகள் எனப்பலரினதும் பிரசன்னத்துடன் தடைகள் இன்றி அஞ்சலிக்கப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இறந்தவர்களை நினைவில் கொள்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் நாம் தமிழர் என்பதற்காக அரசாங்கம்; வேறு பட்ட அணுகுமுறை வாயிலாக எமது நினைவுகூரலைத் தடுக்கின்றது என்பதே பிரச்சினை. பொலிசாரும் இராணுவத்தினரும் அரசாங்கத்தின் உள்நோக்கத்தினை சட்டம் ஒழுங்கு என நடைமுறைப்படுத்துகின்றனர்.

தனக்குப் பிடிக்காத விடயங்களுக்கு தனிமைப்படுத்தல் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்துகின்றது. ஏற்கனவே பொன் சிவகுமாரன் நினைவு தினத்தில் நினைவு கூர்வதற்கு தவிசாளராக சென்ற நான் அஞ்சலிக்க முடியாது தடுக்கப்பட்டேன்.தடுப்பதற்கான நியாயமாக, பதவி நிலையில் எனக்கு அத்தியவசிய விடயங்களுக்கே வெளியில் நடமாடும் அனுமதியுள்ளது. நாடு பூட்டப்பட்டுள்ள நிலையில் அஞ்சலிக்க முடியாது என பெருந்தொகை பொலிசாரும் அதிரடிப்படையினரும் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். பின்னர் நான் வெளியில் அஞ்சலி செய்திருந்தேன்.

ஜனாதிபதி சர்வதேசத்திடம் நினைவு கூர்தல் சுதந்திரத்திற்கு தடையில்லை என கூறி விட்டு உள்நாட்டில் வேறுவகையான நடைமுறையினைக் கையாள்கின்றார். அடிப்படையில் எமது நினைவுகூரல் சுதந்திரத்தினை நடைமுறைப்படுத்தவே முடியாத இனமாகத்தான் வாழ்கின்றோம் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *