
கடுவெல,மே 08
கடுவலை நீதிவான் சனிமா விஜேபண்டாரவின் இல்லத்திற்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி கடமை தவறியமைக்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், நீதிபதிகளின் பாதுகாப்பு விவரங்களில் உரிய நேரத்தில் மற்றும் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடுவலை நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டமை தொடர்பில் பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
நீதிச் சேவைகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட தகவல் தொடர்பில் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டதாகவும், நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பும் இந்த விடயம் தொடர்பில் பிரதமருக்கு அறிவித்துள்ளதாகவும் அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடுவலை நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பை மீண்டும் ஏற்படுத்துமாறும், நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதித்துறையினரின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.
மே 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதைத் தடுக்குமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கடந்த 4 ஆம் திகதி கடுவலை நீதவான் நிராகரித்திருந்தார்.
அத்துடன், அன்றைய தினம், நாடாளுமன்றத்திற்கு அருகில் கைது செய்யப்பட்ட 13 பேரை சொந்த பிணையில் விடுவிக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில், அவரது இல்லத்துக்கு பாதுகாப்பினை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

