
ரணிலின் பதவியேற்பு இந்த ஆட்சி முறையையும் திருடர்களையும் பாதுகாக்கவே என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வே. மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டின் பொருளாதாரம் மக்களின் வாழ்க்கைக்கு மிக பாரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கின்ற சூழ்நிலையில் அதற்கு தீர்வு காண வக்கற்ற அரசாங்கம் மக்கள் போராட்டங்களை நசுக்க பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் சிங்கள மக்களின் மீட்பராக கருதப்பட்ட மகிந்த ராஜபக்ஷ மிக கேவலமான முறையில் நாட்டை தீயிட்டு கொலுத்திவிட்டு பதவியில் இருந்து விலகியிருக்கிறார்.
அதேவேளை ஏதேச்சதிகார ஜனாதிபதி கோட்டாபாய பதவி விலக வேண்டும் இந்த ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நாட்டின் இன்றைய பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு உடன் தீர்வாகவும் நிரந்தர தீர்வுக்கான முன்நகர்வாகவும் தற்காலிக இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்பதற்கு பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய கட்சிகள் கோட்டாபாய பதவி விலக வேண்டும் என்பதனை நிபந்தனையாக முன்வைத்து வந்தனர். ஆனால் தீடிரென எந்த நிபந்தனைகளும் இல்லாமல் பாராளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்தை மட்டுமே கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்ஹ ஜனாதிபதியினால் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.
இது இன்று ஆட்டம் கண்டு வரும் இந்த ஆட்சிமுறையை பாதுகாக்கவும் ராஜபக்ஷாக்கள் உள்ளிட்ட திருட்டு கும்பலை பாதுகாக்கும் முயற்சியே எனவும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தேசிய அமைப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ரணில் விக்ரமசிங்ஹ நவத்தாராள பொருளாதாரத்தின் நம்பிக்கைக்குறிய பிரதிநிதியாவார் அதேவேளை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்லபிள்ளையாகவே செயற்பட்டு வந்திருக்கிறார்.
அத்தோடு இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமானவர்களில் ரணில் விக்ரமசிங்ஹவுக்கு கணிசமான பங்குண்டு. அது மாத்திரமன்றி எதிர் எதிர் அணிகளில் இருந்தபோதும் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்வதில் ரணிலும் ராஜபக்ஷகளும் மிக புரிந்துணர்வுடனேயே செயற்பட்டு வந்துள்ளனர்.
எனவே தான் ராஜபக்ஷகளுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு வலுவடைந்து வரும் அதேவேளை இன்றைய அரசியல் அமைப்பும் ஆட்சிமுறையும் மாற்றப்பட வேண்டும் என்ற கோசம் மேலோங்கி வரும் சூழ்நிலையில் கோத்தாபாய மிகத்தந்திரமாக ரணிலை பதவியில் அமர்த்தியிருக்கிறார்.
எனவே கடந்த காலத்தில் மிகப்பலவீனமான தலைவராக கருதப்பட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவரால் இன்றைய பொருளாதாரத்தையும் அரசியல் நெருக்கடிகளையும் மீட்க முடியாது.
மாறாக அவர் ராஜபக்ஷகளும் இந்த ஆட்சி முறைக்கும் இன்னும் கொஞ்சக்காலம் முன்டுகொடுப்பவராகவே இருக்கப்போகிறார்.பதவியேற்புக்கு பின்னரான அவரது பேச்சு இன்றைய மக்களின் கோரிக்கைகளை எந்தவகையிலும் கணக்கில் எடுத்ததாக தெரியவில்லை.
மாறாக சர்வதேச நாணய நிதியத்திடம் மண்டியிடப்போவதனை எதிர்வு கூறுவதாகவே அமைந்திருந்தது. எனவே நாடு மேலும் கடன் சுமைக்குள் தள்ளப்படப்போகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.எனவே கோத்தா ரணில் கள்ள உறவு நிராகரிக்கப்பட வேண்டும்.
இன்று மக்கள் வேண்டிநிற்கும் உண்மையான மாற்றத்தை கொண்டு வருவதற்கு இதயசுத்தியுடன் செயற்படக்கூடிய இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும்.
அத்தோடு கோத்தாபாய பதவி விலகி புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான சாத்தியமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் வரை மக்கள் போராட்டங்கள் இன்னும் வலுவாக முன்னெடுக்கப்பட வேண்டும். முற்போக்கு,ஜனநாயக, இடதுசாரி சக்திகள் இப்போராட்டங்களை வழிப்படுத்தவும் ஒன்றினைந்து தலைமை தாங்கி பொது வேலைதிட்டத்தின் கீழ் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.