இயற்கைச் சீற்றத்தால் தென்னிலங்கையில் பாதிப்பு!

நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக 2 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பு கருதி உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. இம்மாவட்டத்தில் 13 பிரதேச செயலகப்பிரிவுகளில் 585 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள எச்சரிக்கை காரணமாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் 3 தற்காலிக முகாம்களிலும், 373 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 362 பேர் உறவினர்களது வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் பலத்த காற்றால் 16 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 82 வீடுகள் இயற்கை இடர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம் காரணமாக குறித்த இரு மாவட்டங்களிலும் பல வீதிகளினூடான போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இரத்தினபுரி – பாணந்துறை வீதி, கிரிஎல்ல – இடம்கொட வீதி, கலவானை – மத்துகம வீதி, இரத்தினபுரி – அலபான வீதி, களுத்துறை மாவட்டத்தில் களுத்துறை – அகலவத்தை வீதி, புளத்சிங்கள – பரகொட வீதி என்பவை வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *