
பிரேசிலியா,மே 17
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ஒட்டுமொத்த பணவிக்க விகிதம் கடந்த 12 மாதங்களில் 12.13% அதிகரித்துள்ளது. அதிக பணவிக்கம் காரணமாக பிரேசிலின் மத்திய வங்கி, தொடர்ந்து 10 முறை வட்டி விகிதத்தை உயர்த்தி, அடிப்படை விகிதத்தை 12.75% ஆக மாற்றியுள்ளது.
கடந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரேசிலில் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது பணவிக்க விகிதம் அதிகரித்து காணப்படுவதாக பிரேசிலிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரேசிலில் எரிபொருள் விலை, மார்ச் மாதத்தில் இருந்ததை விட 3.2% உயர்ந்துள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்தில் உணவு மற்றும் குளிர்பானங்கள், போக்குவரத்து செலவுகள், சுகாதாரம், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றின் விலைகள் முறையாக 2.06%, 1.91%, 1.77%, 1.53% மற்றும் 1.26% அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 11 பொருட்களின் மீதான இறக்குமதி வரியை குறைப்பதாக பிரேசில் நாட்டின் நிதி அமைச்சகம் அறிவித்தது. உற்பத்தி பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளை நீக்குவது, விநியோக செலவினங்களை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பிரேசிலின் உள்நாட்டுச் சந்தையில் பணவிக்க அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

