ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்தூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முதலில் இவர்கள் 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில் 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மத்திய அரசு அனுமதிக்காததால் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறவில்லை.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கவும், விடுதலை செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018 ஆம் ஆண்டில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. ஆனால் அந்த தீர்மானம் மீது தமிழக ஆளுநர் நீண்ட காலமாக எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் வைத்துள்ளார். இது வருத்தம் அளிப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

கடந்த வாரம் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்த நீதிபதிகள் இறுதி வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், மனுதாரர் தரப்புக்கும் உத்தரவிட்டனர்.

அதன்படி மத்திய அரசு தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான வாதத்தில் இந்த வழக்கை விசாரித்தது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு என்பதால் மத்திய அரசுக்குத்தான் முழு அதிகாரமும் உள்ளது. ஆளுநர் இது தொடர்பாக பரிந்துரை செய்துள்ளதால் தற்போது ஜனாதிபதி மட்டுமே முடிவு எடுக்க முடியும் என கோரப்பட்டிருந்தது.

பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ வாதத்தில், ‘தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய முடிவை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது அரசியல் சாசனத்துக்கு முரணானது. எனவே உச்ச நீதிமன்றம் தனக்குரிய பிரத்தியேக அதிகாரமான 142 ஐப் பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை கூடிய போதே பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *