முறையான…

முறையான முகாமைத்துவம் இல்லாவிட்டால் பேராபத்து ஏற்படும் என எச்சரிக்கை!

நாட்டில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் காணப்பட்ட கொரோனா அச்சுறுத்தல் நிலைமை தற்போது குறைவடைந்திருந்தாலும், தற்போதைய நிலைமையை முறையாக முகாமைத்துவம் செய்யாவிட்டால் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் காணப்பட்டதை விட அதிக அபாய நிலைமை ஏற்படக் கூடும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பதில் பணிப்பாளர் விசேட வைத்தியர் சமித்த கினிகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டிலுள்ள மொத்த சனத்தொகையில் இதுவரையில் 53 சதவீதமானோர் முழுமையாக தடுப்பூசிகளைப் பெற்று பாதுகாப்பு பெற்றுள்ளனர்.

63.6 சதவீதமானோர் முதற்கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் இது மாத்திரம் போதுமானதல்ல.

மீண்டுமொரு அபாய நிலைமை ஏற்படாமல் இருப்பதற்கு அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது தனிநபர் உரிமை என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் இதில் சமூக உரிமையும் பொறுப்பும் உள்ளடங்கியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எந்தவொரு நாடு எந்தவொரு தடுப்பூசியையும் தடை செய்யவில்லை. மாறாக குறித்த தடுப்பூசிகளைப் பெற்று தமது நாட்டுக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் காலத்தில் சில சலுகைகளை வழங்குகின்றன.

எனவே தடுப்பூசி எதுவாக இருந்தாலும் அதனைப் பெற்றுக் கொள்ள தயங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். முன்னரைப் போன்ற அபாய நிலை மீண்டும் ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்துவது இலகுவானதல்ல.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *