
கொழும்பு,மே 20
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸை தனியார் மயப்படுத்தும் பிரதமரின் முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர் சங்கம் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் வெள்ளி நண்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இதுவரையான வரலாற்றை ஆராயாமலேயே பிரதமர் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் செயலாளர் காமினி ரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நட்டமடைவதற்கு அதன் ஊழியர்கள் காரணமல்ல எனவும், டீல் அரசியல்வாதிகளும் அவர்களின் தவறான முகாமைத்துவமுமே குறித்த வீழ்ச்சிக்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த பல ஆண்டுகளாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு திறைசேரியினால் எந்தவொரு நிதியுதவியும் வழங்கப்படாத நிலையில், ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவுகளை மேற்கொண்டு இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்தல், கடன் வாங்குதல், பொதுமக்களின் மீது அபராதம் மற்றும் வரிகளை விதிப்பதே புதிய பிரதமரின் கொள்கையாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸை தனியார் மயப்படுத்தும் முயற்சி தேசிய குற்றமாகும் எனவும் அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் செயலாளர் காமினி ரணதுங்க தெரிவித்துள்ளார்.

