
கொழும்பு,மே 20
இந்தியாவினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனிதாபிமான உதவிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகள் கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
9 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன் அளவிலான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியன குறித்த மனிதாபிமான உதவிகளில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனிதாபிமான உதவிகள் நாட்டை வந்தடைந்ததும் அவற்றை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த மனிதாபிமான உதவிகள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து கடந்த 18 ஆம் திகதி அனுப்பப்பட்டதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 40 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய மனிதாபிமான உதவிகளின் முதற்கட்டமாக குறித்த மனிதாபிமான உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனிதாபிமான உதவிகளின் மொத்த அளவு 5 தசம் 5 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

