வடக்கில் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கு கொரோனாத் தடுப்பூசி! – ஆ.கேதீஸ்வரன் அறிவிப்பு

வடக்கு மாகாணத்தில் சிறப்பு தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கான கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படும் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில், ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்தமை,

கொரோனாத் தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் சிறப்புத் தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கான பைஸர் தடுப்பூசி முதற்கட்டமாக மேற்கு மாகாணம், குருநாகல் மற்றும் அனுராதபுர மாவட்டங்களில் கடந்த செப்ரெம்பர் 24 ஆம் திகதி முதல் வழங்கப்படுறது.

அதனிடையே, அடுத்த கட்டமாக நாளை முதல் நாடு முழுவதும் உள்ள சிறப்புத் தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கு இத் தடுப்பூசியை வழங்க முடிவு செய்துள்ளது.

இத்தடுப்பூசி சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக குழந்தைநல மருத்துவ வல்லுநர் அல்லது பொது மருத்துவ வல்லுநர் ஒருவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வழங்கப்படும்.

எனவே, வடமாகாணத்தில் குழந்தைநல மருத்துவ வல்லுநர் அல்லது பொது மருத்துவ வல்லுநர் உள்ள மருத்துவமனைகளில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்.போதனா மருத்துவமனை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதார மருத்துவமனைகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது மருத்துவமனைகளில் இத்தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

பின்வரும் நோய்நிலமையுள்ள சிறுவர்களுக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

1.நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டு நிலை.

2.வேறு நோய்நிலமைகளால் ஏற்பட்ட நோய் எதிர்ப்புக் குறைபாடு (இரத்தப் புற்றுநோய் மற்றும் ஏனைய புற்றுநோய்களுக்காக சிகிச்சை பெறுபவர்கள் உட்பட).

3.குருதியுடன் தொடர்புடைய நோய்நிலமைகள்.

4.அகச்சுரப்புக்கள் தொடர்பான நோய்நிலைமைகள்.

5.நாட்பட்ட நரம்பியல் குறைபாடுகள்.

6.பிறப்பில் ஏற்பட்ட மரபணு குறைபாடு உள்ளவர்கள்.

7.வேறு ஏதாவது மரபணு, அனுசேப அசாதாரண நிலமையுடையவர்கள்.

8.நாட்பட்ட இதய நோய்நிலமைகள்.

9.நாட்பட்ட சுவாச நோய்நிலமைகள்.

10.நாட்பட்ட சிறுநீரக தொகுதியுடன் தொடர்புடைய நோய்நிலை.

11.நாட்பட்ட உணவுக்கால்வாய் மற்றும் ஈரல் தொடர்பான நோய் நிலமைகள்.

12.நாட்பட்ட மூட்டுவாத நோய்நிலமைகள்.

13.நாட்பட்ட உளநல பிரச்சினைகள் உடையவர்கள்.

14.வேறு ஏதாவது குறிப்பிடப்பட்ட நோய் நிலைமைகளுக்காக குழந்தைநல மருத்துவ நிபுணர் அல்லது பொது வைத்திய நிபுணரால் தடுப்பூசிக்காக பரிந்துரைக்கப்படுபவர்கள்.

இங்கு குறிப்பிட்ட நிலமையுடைய 12 தொடக்கம் 19 வயதினருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலர் அவர்களது பிள்ளையின் மருத்துவ அறிக்கைகளை தமது பிரதேசத்திற்கு அருகிலுள்ள மேற்கூறப்பட்ட மருத்துவமனைகள் ஏதேனும் ஒன்றில் சமர்ப்பித்து தமது பிள்ளைகளுக்குரிய தடுப்பூசியைப் பாதுகாப்பாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், இவ்வாறான சிறப்புத் தேவை மற்றும் நாட்பட்ட நோய்நிலமையுடைய 12 தொடக்கம் 19 வயதுடைய பிள்ளைகள் தொடர்பாக அறிந்த சுகாதாரப் பணியாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் அப்பிள்ளைகள் தொடர்பான விவரங்களை உங்கள் பிரதேச சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு அறியத்தருமாறும், இத்தகவலை அவர்களுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு தெரிவிக்கும்படியும், அச்சிறுவர்களை தடுப்பூசி வழங்கும் வைத்தியசாலைகளுக்கு அனுப்ப ஊக்குவிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். என அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply