கொழும்பிலுள்ள தனது சொத்துக்களை பாதுகாக்க கஜேந்திரகுமார் விலை போய்விட்டார்: மேயர் மணிவண்ணன் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம், மே 21: தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொழும்பில் ரூ.2,000 கோடி சொத்துக்கள் உள்ளன. அவர் சுயாதீனமாக இயங்க முடியாத நிலையில் இருக்கிறார். சொத்துக்களை பாதுகாக்க விலை போய்விட்டார் . அவரைப் பார்க்க பரிதாபமாக உள்ளது என யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் “இலங்கையில் தமிழர்கள் இனஅழிப்பிற்கு உள்ளானார்கள் என கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு உத்வேகம் அளித்துள்ளது. இதற்காக உழைத்த புலம்பெயர் தமிழர்களிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரை பாவிக்க வேண்டுமென யாரும் எம்மை தடுக்க முடியாது. அந்த அமைப்பை தொடங்கியவர்களில் நானும் ஒருவர். முன்னணியின் பெரும்பாலானவர்கள் எம்முடன் இருக்கிறார்கள். ஒருவரை அமைப்பிலிருந்து நீக்குவெதெனில் சரியான பொறிமுறை அவசியம். அந்த பொறிமுறையை சரியாக பயன்படுத்த வேண்டும். அல்லது தாமாக விலகிச் செல்ல முடியும்.

முன்னணியின் முதலாவது தலைவராக பார்த்தீபனின் தந்தை வரதராஜன் இருந்தார். பின்னர் கஜேந்திரகுமார் தெரிவானார். பின்னர் எந்தவொரு தெரிவும் நடக்கவில்லை. விரைவில் முன்னணியின் தேசிய மாநாடு கூட்டப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டும். அந்த நிர்வாகத்தை ஏற்காதவர்கள் முன்னணியை விட்டு விலக பூரண சுதந்திரம் உள்ளது.

கஜேந்திரகுமார் அண்ணையில் நான் கோபப்படுவதில்லை. பரிதாபப்படுகிறேன். ஆரியகுளத்தை புனரமைக்க நாம் முயன்ற போது அருகிலுள்ள விகாராதிபதி தடுத்தார். கஜேந்திரகுமார் அண்ணையாட்களும் தடுத்தார்கள். அவரது இடத்தில் நீங்களிருந்தாலும் அதைத்தான் செய்வீர்கள். கொழும்பில் உங்களிற்கு 1000, 2000 கோடி சொத்துக்கள் இருந்தால், நீங்களும் இந்த நிலைப்பாடுதான் எடுக்க வேண்டி வரலாம். அவரால் சுயாதீனமாக இயங்க முடியாதுள்ளது. நீங்களும் கொழும்பில் பிறந்து வளர்ந்து குடும்ப உறவுகளுடன் இருந்திருப்பீர்கள் எனில் அவரை மாதிரியே 1000, 2000 கோடிகளிற்கு மேல் சொத்துக்களை வைத்திருந்தால் இதே நிலைப்பாடுகளையே எடுக்க வேண்டியிருக்கும்” என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *