மகப்பேற்று சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கும் பாரிய தட்டுப்பாடு!

மகப்பேற்று சத்திர சிகிச்சையின் பின்னர் தைப்பதற்கு பயன்படுத்தும் நூல் உள்ளிட்ட பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர்கள் மருத்துவ மற்றும் குடிமை உரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அண்மையில் எமது சங்கமானது, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மருந்து விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவர் ருவான் விஜேவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினோம்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பின்போது நாம் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் சாதகமான பதில்கள் கிடைத்தன.

நாட்டில் தற்போது தீவிர நிலைமையை அடைந்துள்ள மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு தற்காலிக தீர்வாக மருந்துத் தட்டுப்பாடுகளை தீர்ப்பதற்கான ஒரு குழுவை நியமித்து அதற்கூடாக பிரதேச வைத்தியசாலைகளுக்கு தேவைப்படுகின்ற அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவ உபகரணங்கள் எவை என்பது தொடர்பில் ஆராய்ந்துப் பார்த்து, அவ்வாறான குறைபாடுகள் நிலவும் வைத்தியசாலைகளுக்கு மட்டும் குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு அவர்கள் உடன்பட்டனர்.

தற்போதைய நிலையில் சில வைத்தியசாலைகளில் மகப்பேற்று சத்திர சிகிச்சையின் பின்னர் தைப்பதற்கான நூல்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.

நான் தனிப்பட்ட ரீதியில் அந்த மருத்து உபகரணங்களை வைத்தியசாலைக்கு பெற்றுக்கொடுத்துள்ளேன். அதேபோன்று நோயாளர்களுக்க மூக்கினூடாக உணவூட்டும் குழாய்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதை மறுப்பதற்கு இல்லை. பிரதேச வைத்தியசாலைகளிலேயே மருந்துகளுக்கு அதிகளவான தட்டுப்பாடு நிலவுகின்றது.

குறிப்பாக சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், உபகரணங்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *