கடல் வழியாக இந்தியாவிற்கு சென்றமையாலும், இந்திய கடவுச்சீட்டு பெறுவதற்கு முயற்சித்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு இன்றுவரை தமிழக சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள், தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து, இன்று மூன்றாவது நாளாக உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மூன்று வருடங்களாக தடுத்த வைக்கப்பட்டுள்ள நாம் எமது குடும்பங்களோடு சேர்ந்து வாழ உதவுங்கள் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,
தமிழ் நாடே தஞ்சமாக அடைந்து, இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் வாழ்வாதாரத்திற்காக இந்திய கடவுச்சீட்டு எடுக்க முயன்ற குற்றத்திற்காக அகதியான எங்களை வெளிநாட்டவர் சிறையில் அடைப்பதன் நோக்கம் அறியாமல், கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டவர் சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கடல் வழியாக இங்கே வந்தவர்களும், எங்களோடு உண்ணாமல் வாழ்க்கைக்காக காத்திருக்கிறார்கள்.
வழக்குகளை முடித்தவர்கள் பல மாதங்களாக விடுதலை செய்யப்படாமல், எங்களோடு உண்ணாவிரத போராட்டத்தில் காத்திருக்கிறார்கள்.
எங்கள் இரத்த உறவுகளே, எங்கள் ஒருமுறையேனும் எங்கள் வாழ்வுக்காக குரல் கொடுக்கக் கூடாதா, எங்கள் தமிழ் உறவுகளை நம்பித்தான் இந்த உண்ணாத போராட்டத்திலே எங்கள் குழந்தைகளையும், எங்கள் குடும்பங்களையும் மனதில் ஏற்று எங்கள் விடுதலைக்காக காத்திருக்கிறோம். – என்று தெரிவித்துள்ளனர்.






