வடமாகாண ஆளுநர் தமிழ் மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவராக இருந்தால் அவரை வீட்டுக்கு அனுப்புவதற்கு நாம் போராடுவோம் என தமிழ் தேசிய கட்சியின் பிரச்சார செயலாளர் ஜெனார்த்தனன்
தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மாநகரசபை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகும். புராதன காலத்திலிருந்து யாழ்ப்பாணம் தமிழ் மக்களின் கலாசார தலைநகராக காணப்படுகிறது.
இதில் ஆளுநரின் தலையீடு என்பது, வெறுமனே யாழ் மாநகர சபையுடன் முரண்படுவது என்பதைத் தாண்டி தமிழ் மக்களின் உணர்வுகளுடன் முரண்படுகிறார் என்றே கூறமுடியும்.
பௌத்த சிங்கள தரப்பினருடன் ஊடாடுவதை விட, பௌத்த சிங்கள தரப்பினருக்கு விசுவாசமாக செயற்படும் தமிழர்களுடன் ஊடாடுவது சற்று கடினமானதாக உள்ளது.
அவர்கள் தமது எஜமான்களுக்கு விசுவாசத்தை காட்டுவதற்காக தமிழ் மக்களின் உணர்வுகளுடன் விளையாடுகின்றார்கள். அவ்வாறு செயற்படாமல் தமிழ் மக்களின் உணர்வுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இல்லாமல் தொடர்ந்து தமிழ் மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவாராக இருந்தால் அவர்களை அகற்றுவதற்கான நடவடிக்கையில் நாம் முன்னின்று செயல்படுவோம்.
வடமாகாண ஆளுநரை அவரது பதவியிலிருந்து அகற்றுவதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் போராட்டங்களை மேற்கொள்வோம்.
அத்துடன் வடமாகாண ஆளுநரை மாற்ற வேண்டி நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்போம் என்றார்.

