தமிழக மக்களின் உதவி இருட்டடிப்பு!

தமிழக அரசின் நிதியில் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படும் உதவிப் பொருள்கள் என்பதை மறைத்து இந்திய மக்களின் உதவி என்று எழுதப்பட்டு, இலங்கை அரசிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்தியத் தூதரகம் விடுத்த அறிக்கையில், இந்தியாவால் நன்கொடையாக வழங்கப்படும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த மனிதாபிமான உதவிப் பொருள்கள் இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

9 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, 50 மெற்றிக் தொன் பால்மா மற்றும் 25 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான மருந்துப் பொருள்கள் அடங்கிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தது.

இந்த உதவிப் பொருள்களை இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் கையளித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த உதவிப்பொருள்களை சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து அனுப்பி வைத்திருந்தார்.

தமிழக அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் 40 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, 500 மெற்றிக் தொன் பால்மா மற்றும் மருந்துப் பொருள்கள் அடங்கிய உதவித் திட்டத்தின் முதற்தொகுதியாக இந்தப் பொருள் தொகுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த உதவிப்பொருள்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள பயனாளர்களுக்கு அரசாங்கத்தால் விநியோகிக்கப்படவுள்ளது – என்றுள்ளது.

இதேவேளை இந்த உதவிப் பொருள்கள் தமிழகத்தில் பொதியிடப்படும்போது அவற்றில், ’தமிழ் நாட்டு மக்களிடமிருந்து அன்புடன், மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சர்’ என்று பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த விடயம் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையிலும், பொருள்கள் அடங்கிய பொதியிலும் மறைக்கப்பட்டு, இந்திய மக்களின் உதவி என மாற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நேற்றைய தினம் பொருள்கள் ஒப்படைக்கப்பட்ட பின்னர், தமிழக முதலமைச்சருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்து ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *