யாழ். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவை பெறுநர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்..!

யாழ். மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவை பெறுநர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் க. மகேசன் ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

அவ் அறிக்கையில் அவர் தெரிவித்தமை,

ஊரடங்குச் சட்டம் நாளை நீக்கப்பட்டதும் மக்களுக்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு வருகை தர வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும்.

இதனால் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்த்துக் கொள்ளும் வகையிலும், நாட்டில் நிலவும் கொரோனா நிலமைகளைக் கருத்தில் கொண்டும், கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் கலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் ஒராண்டு காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் கலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கால எல்லைக்குள் உள்ளடங்காதவர்களுக்கான சேவைகள் பற்றிய விபரம் மற்றும் புதிய விண்ணப்பங்கள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திர எழுத்துப் பரீட்சை, பிரயோகப் பரீட்சை என்பவற்றுக்கான திகதிகள் அரசின் புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமையவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிப்படுத்தலுக்கு அமையவும் அறியத்தரப்படும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply