இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்ணெண்ணை இல்லாமை மற்றும் எரிவாயு இல்லாத காரணத்தினால் மக்கள் தினமும் தமது அன்றாட கடமைகளை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல் நிலைகளை எதிர்நோக்குவதாக தெரியவருகின்றது.
மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளில் எரிவாயு அடுப்புகள் மற்றும் மண்ணெண்ணை அடுப்புகளே பாவிக்கப்பட்டுவரும் நிலையில் எரிவாயு மற்றும் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
விறகு அடுப்புகளை பயன்படுத்த முடியாத நிலையில் மட்டக்களப்பின் பல பகுதிகளின் நிலைமைகள் உள்ளதன் காரணத்தினால் எரிவாயு மற்றும் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் தினமும் வீதிக்கு படையெடுக்கும் நிலையே காணப்படுகின்றது.
இன்றைய தினம் மட்டக்களப்பு திருமலை வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை தொடக்கம் பிற்பகல் வரையில் கொழுத்தும் வெளியிலிலும் பெண்கள், வயோதிபர்கள் என ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்றதை காணமுடிந்தது.
ஒரு கிலோ மீற்றருக்கும் அதிகமான நீண்ட வரிசையில் நின்று இன்று மண்ணெண்ணையினை மக்கள் பெறும் நிலைமையேற்பட்டதுடன் குறிப்பிட்ட நேரத்துடன் மண்ணெண்ணை வழங்கப்பட்டு முடிந்த நிலையில் பெருமளவானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலையினையும் காணமுடிந்தது.
தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விஜயம் செய்து மண்ணெண்ணைக்காக நின்று நின்று கிடைக்காத நிலையிலேயே ஏமாற்றத்துடன் செல்லும் நிலைமைகள் தினமும் நடைபெறுகின்றது.
சில வீடுகளில் நீண்டகாலமாக கடைகளிலேயே உணவுகளைப்பெற்றுவருவதாகவும் கடைகளில் அதிகளவான விலைகள் சாப்பாடுக்கு பெறப்படுவதன் காரணமாக அதன் சுமையினை தாங்கமுடியாத நிலைக்கு செல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, அத்தியாவசிய பொருட்களின் தொடர் விலையேற்றத்தால், ‘வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு’ எனும் பொறிக்குள் சிக்கி, மீண்டெழ வழியின்றி மலையக மக்கள் திண்டாடுகின்றனர்.
மலையக பெருந் தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுள் பெரும்பாலானவர்கள், பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிலிலேயே ஈடுபடுகின்றனர்.
அவர்களுக்கு நாட் சம்பளமாக நிபந்தனை அடிப்படையில் ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது.
வேலை நாட்களும் குறைக்கப்பட்டுள்ளதால் வழங்கப்படும் சம்பளமானது, அவர்களின் உணவு தேவையைக்கூட பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை என மலையக சிவில் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கோதுமைமாவின் விலை நான்கு தடவைகள் அதிகரிக்கப்பட்டுவிட்டன.
இதர உணவுப் பொருட்களும் உச்சம் தொட்டுள்ளன. இதனால் வீட்டிலுள்ள பொருட்களை விற்றும், அடகு வைத்தும், கடன் வாங்கியுமே வாழ்க்கையை ஓட்ட வேண்டியுள்ளது என மக்கள் தமது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துகின்றனர்.
பெருந்தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்கள், விவசாயத்தையும் உப தொழிலாக செய்துவருகின்றனர்.
உரத்தட்டுப்பாட்டால் பலர் விவசாயத்தை கைவிட்டுள்ளனர். இதனால் விவசாயம் ஊடான வருமானமும் தடைபட்டுள்ளது.
பெருந்தோட்டப்பகுதிகளில் இருந்து கொழும்புக்கு தொழிலுக்குச் சென்றவர்களும், உணவு தட்டுப்பாடு, தொழில் இன்மை உள்ளிட்ட காரணங்களால் தமது ஊர்களுக்கு திரும்பிவிட்டனர்.
இவர்களை கவனிக்க வேண்டிய நிலையும், தோட்டத் தொழிலை நம்பியிருக்க வேண்டியவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு சில பகுதிகளில் குடும்ப வன்முறைகளும் வெடித்துள்ளன.
எரிபொருள் தட்டுப்பாட்டால் ஆட்டோ ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறுகிய தூரத்துக்குகூட அதிக கட்டணம் அறவிடப்படுவதால், மக்கள் பொதுபோக்குவரத்தையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு எல்லா வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள தமது பகுதிகளுக்கே இந்தியா நிவாரணத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .






