
கொழும்பு,மே 24
நாட்டின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மாலைதீவில் அடைக்கலம் அளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவில்லை என இலங்கையில் தற்போதுள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் தெரிவித்துள்ளார்.
இலங்கை விஜயத்தின் போது மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கவும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மகிந்த தனக்கும் தனது குடும்பத்தவர்களிற்கும் மாலைதீவில் அடைக்கலம் வழங்குமாறு மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என வெளியான தகவல்கள் தவறானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மாலைதீவு உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்த விரும்பும் சக்திகள் மாலைதீவில் உள்ளன,என தெரிவித்துள்ள அவர் மகிந்த ராஜபக்ஷ தொடர்பில் வெளியான தகவல்கள் பொய்யானவை எனவும் தெரிவித்துள்ளார்.
இது முற்றிலும் பொய்யான விடயம் நான் மகிந்தராஜபக்ஷவை சந்திக்கவில்லை மாலைதீவில் உள்ள சில சக்திகள் போலியான தகவல்களை உருவாக்குவது கவலையளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சர்வதேச அளவில் நிவாரண உதவிகளை பெறுவதற்கான ஒருங்கிணைப்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமீபத்தில் நியமிக்கப்பட்ட நசீட் நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவியை பெற்றுக்கொடுக்கவே நான் இங்கு வந்துள்ளேன். இலங்கையின் உள்விவகாரங்களை இலங்கை மக்கள் தீர்த்துக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் நாமல் ராஜபக்ஷவுடன் மகிந்த விவகாரம் குறித்து ஆராயவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

