
திருமலை, மே 25
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதி தம்பலகாமம் சந்தியை அண்மித்த சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக வாகன விபத்தொன்று இன்று (25) இடம் பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் கனரக வாகனமும் மோதியதில் அறுவர் காயமடைந்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸும் களனியை நோக்கி சென்ற கனரக வாகனமுமே இவ்வாறு மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. சுவாமிமலை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் பஸ் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பின்னால் வந்த கனரக வாகனமே மோதியதால் இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காயமடைந்த அறுவரில் ஐவர் திருகோணமலை பொது வைத்தியசாலையிலும் ஒருவர் கந்தளாய் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.