
கொழும்பு,மே 25
நாட்டில் இதுவரை மருந்துகளை உரிய முறையில் களஞ்சியப்படுத்தாத காரணத்தினால் 2011ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளன.
இந்த மருந்துகள் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல என அடையாளம் காணப்படும் வரை அவற்றில் 99 வீதமானவை நோயாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. தரமற்ற மருந்துகளுக்கான செலவுகளை வழங்குநர்களிடமிருந்து அறிவிட்டுக் கொள்ள முடியாமல் போயுள்ளது.
மருந்துகளின் உறுதித்தன்மை காணப்படும் வகையில் உரிய தரத்தில் அவற்றை களஞ்சியப்படுத்த உரிய வசதிகளை ஏற்படுத்துமாறு கோபா குழு உரிய தரப்பினருக்கு பரிந்துரை செய்துள்ளது.
மருந்து வழங்கல் பிரிவுக்குச் சொந்தமான களஞ்சியசாலைகளில் வெப்ப நிலையை முறையாக பேணாமை, மருத்துவ வழங்கல்கள் மத்திய ஒளடத களஞ்சியத்தினதும் வைத்தியசாலைகளின் நடைக் கூடகங்களிலும் வைக்கப்பட்டுள்ளதை குழு அவதானித்துள்ளது.
மருந்துகள் கிடைத்தவுடன் அவை தரமற்றவையென அடையாளம் காண்பதற்கான முறையொன்று காணப்படின் அதற்கான நட்டத்தை வழங்குனர்களின் உத்தரவாத கொள்கையிலிருந்து அறவிட்டுக் கொள்ள முடியும், அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் மூலமாக 60 வகையான மருந்துகளின் தரத்தை பரிசோதனை செய்ய முடிந்தால் இந்நிலைமையை குறைந்தப்பட்சமேனும் தவிர்த்துக்கொள்ள முடியும்.
மருத்துவ வழங்கல் பிரிவானது தரமற்ற மருந்துகள் அல்லது மருத்துவ வழங்கல்களுக்கான செலவுகளை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திடமிருந்து அறவிடுவதற்குப் பதிலாக உரிய வழங்குநர்களிடமிருந்து அறவிட்டுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசாங்க கணக்குகள் பற்றிய குழு உரிய தரப்பினருக்கு பரிந்துரை செய்துள்ளது.

