பிரித்தானிய பிரதமருக்கு மனு அனுப்பிய தமிழ் இளையோர்!

1893 இனப்படுகொலை நாளான கறுப்பு யூலையை நினைவு கூரும் முகமாக இன்று பிரித்தானியாவில் ஒன்றிணைந்த இரண்டாம் தலைமுறையை சேர்ந்த தமிழ் இளையோர், பிரித்தானிய பிரதமருக்கு மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த மனுவில், “38 ஆண்டுகளாகியும் கறுப்பு யூலை இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காமல் தவிக்கும் நிலையில் தமிழ் இளையோராகிய நாங்கள், இலங்கை இராணுவத்தளபதி சவேந்திரசில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம், தமிழ்மக்களுக்கு நீதி வழங்குவதாக பிரித்தானியா கொடுத்த வாக்குறுதியை நிரூபித்துக்காட்ட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட யுத்தகுற்றங்கள் மற்றும் மனிதநேயத்தைக்கு எதிரான குற்றங்களில் சவேந்திர சில்வா தொடர்புபட்டிருப்பதற்பான நம்பகமான ஆதாரங்கள் அடிப்படையில் கடந்த வருடம் சவேந்திரசில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மீது அமெரிக்கா பயணத்தடை விதித்திருந்தது.

கடந்த ஏப்பிரல் 2021 இல், சர்வதேச மனித உரிமை அமைப்பான ITJP, சவேந்திர சில்வாவின் யுத்த குற்றங்களுக்கான்ஆதாரங்களை உள்ளடக்கிய 50 பக்க அறிக்கை ஒன்றை பிரிந்தானிய அரசிடம் சமர்ப்பித்து, அவரை தடை செய்யும்படி கோரியிருந்தது.

இதுபோல, மே 2021 இல் ICPPG என்ற அமைப்பு, இலங்கையில் மிக அண்மையில் சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்ட 100க்கு மேற்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து, தொடரும் சித்திரவதைகளுக்கு காரணமான சவேந்திர சில்வா பிரித்தானிய அரசால் தடைசெய்யப்படவேண்டும் என்று கோரியருந்தனர்.

மேலும், தமிழ் இளையோரின் முயற்சியால், கடந்த 18 மே 2021 அன்று பிரித்தானிய பாராளுமன்றில் ஸ்கொட்லாந்து தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆன் (Hon. McLaughlin Anne) அவர்களால் சவேந்திரசில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுப்பதுடன் சர்வதேச மனித உரிமைகள் விடயத்தில் பிரித்தானியா தனது உறுதியான நிலைப்பாட்டை முன்னிறுத்த வேண்டுமென்பதை உள்ளடக்கிய முன்பிரேரணை (EDM 64) ஒன்று கொண்டுவரப்பட்டது.

இதனை தொடர்ந்து, இந்த போராட்டத்தை முழுமையாக தங்கள் கையில் எடுத்துள்ள இரண்டாம் தலைமுறை தமிழ் இளையோர், இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு, தொடர் சந்தப்புக்களை நடாத்தி, பிரித்தானிய அரசிற்கு அழுத்தம் வழங்கும் படியும் குறித்த முன்பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்து இடும் படி கோரி வருகின்றனர். இதன் விளைவாக இதுவரை 29 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக திரட்டியுள்ளனர்.
https://edm.parliament.uk/early-day-motion/58497

அண்மையில் தொழிற்கட்சியின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களிற்கான நிழல் அமைச்சர் கௌரவ ஸ்ரிபன் கினோக் (Rt Hon. Stephen Kinnock) அவர்களுடனும் இந்த இளையோர் நடாத்திய சந்திப்பின் விளைவாக அவரும் சவேந்திரசில்வா மீது GSR இன் கீழ் பயணத்தடை உள்ளிட்ட தடைகளை விதிக்க கோரியிருந்தார்.

இவ்வாறு இந்த இளந்தலைமுறையினர் தாமாக முன்வந்து, முன்னைடுத்து செல்லும் இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாகவே இன்று பிரித்தானிய பிரதமருக்கு இன்று மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

எனவே பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் அனைவரும் இத்துடன் இணைக்கப்பட்ட கடிதத்தினை தத்தமது பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு மின்னஞ்சல் அனுப்பி அவர்களின் ஆதரவினைக் கோருமாறு ICPPG யின் ஊடக இணைப்பாளர் திருமதி. கிறிஸ்ரி நிலானி கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் மக்கள் அனைவரும் அமைப்பு பேதங்கள் இன்றி ஒன்று திரண்டு இந்த முயற்சிக்கு ஆதரவு தரும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது நடைமுறைச்சாத்தியமான இலக்கு மட்டுமன்றி எங்கள் ஒற்றுமையின் பலத்தை மீண்டும் நிரூபிக்கவும் சோர்ந்து போன எமது சமூகத்தை உற்சாகமூட்டவும் ஒரு நல்ல சந்தர்ப்பமாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அத்துடன் இளையோராகிய தங்களால் ஆரம்பிக்கப்பட்ட கீழே உள்ள, இணைய வழி கையெழுத்துப் போராட்டத்திற்கும் தங்களின் ஆதரவினை வழங்குமாறும் கோரியுள்ளார்கள்.
https://www.change.org/p/time-for-the-uk-to-sanction-sri-lanka-s-army-commander-war-criminal-shavendra-silva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *