
டாக்கா, மே 26
இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் மீது பந்தை வீசியெறிந்த பங்களாதேஷ் வீரர் தைஜுல் இஸ்லாமுக்கு அவரின் போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
வீரர் ஒருவர் மீது, அல்லது அவருக்கு அருகில் பொருத்தமற்ற வகையில் அல்லது அபாயகரமான வகையில் பந்தை எறிவது தொடர்பான ஒழுக்கக்கோவையை தைஜுல் இஸ்லாம் மீறியுள்ளதாக ஐ.சிசி. தெரிவித்துள்ளது.
டாக்காவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது நேற்று நேற்று புதன்கிழமை, இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய போது 69 ஆவது ஓவரில் இச்சம்பவம் இடம்பெற்றது.
களத்தடுப்புச் செய்துகொண்டிருந்த தைஜுல், பந்தை எடுத்து ஏஞ்சலோ மெத்யூஸ் மீது எறிந்தார். அப்பந்து மெத்யூஸை தாக்கியது.
மேற்படி குற்றச்சாட்டை தைஜுல் இஸ்லாம் ஏற்றுக்கொண்டார் எனவும், போட்டி மத்தியஸ்தர் கிறிஸ் புரோட்டினால் விதிக்கப்பட்ட அபராதத்தை அவர் ஏற்றுக்கொண்டார் எனவும் ஐ.சி.சி தெரிவித்துள்ளது

