காலிமுகத்திடல் அமைதிப் போராட்டம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் நான்கரை மணிநேரம் இரகசியமாக விசாரணை செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ம் திகதி மாலையே விசாரணை நடைபெற்ற போதிலும் விசேடமாக எதுவும் வெளியாகவில்லை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வசிக்கும் நுகேகொட விஜயராம மாவத்தையில் உள்ள வீட்டுக்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினரே இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 9ம் திகதி காலி முகத்திடலில் அமைதிப் போராட்டத்தளம் குண்டர்களால் தாக்கப்பட்டமைக்கு முன்னர் அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டம் தொடர்பில் முன்னாள் பிரதமரிடம் நீண்ட நேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

