ஐ.பி.எல்.: முதல் அணியாக பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறியது சென்னை அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 44ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில், முதல் அணியாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சார்ஜாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக சஹா 44 ஓட்டங்களையும் அபிஷேக் சர்மா மற்றும் அப்துல் சமாட் ஆகியோர் தலா 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சென்னை அணியின் பந்துவீச்சில், ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும் பிராவோ 2 விக்கெட்டுகளையும் தாகூர் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 135 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் சென்னை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ருத்துராஜ் கெய்க்வாட் 45 ஓட்டங்களையும் டு பிளெஸிஸ் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் ரஷித்கான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹேசில்வுட் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply