அரசியலுக்கு அப்பால் மக்களின் தேவை நிறைவு செய்யப்பட வேண்டும்! எச்.எம்.எம்.ஹரீஸ்

அரசியலுக்கு அப்பால் மக்களின் தேவை நிறைவு செய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்மொழியப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (01.10.2021) கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்றைய காலகட்டம் தேசிய அரசியலில் சவால் மிக்க ஒரு காலகட்டமாக உள்ளது. நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ச எதிர்வரும் காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மிக நுட்பமான முறையில் இந்த வரவு செலவுத் திட்டத்தை தயாரித்து வருகிறார்.

கல்முனைப் பிராந்தியத்தை பொறுத்தளவில் இங்கு முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் பிராந்தியத்தின் நலனுக்காகவும் பொதுமக்களுக்குரியதாகவும் இருக்க வேண்டும்.

இங்கிருக்கும் அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மக்கள் பிரதிநிதிகளோடு இணைந்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதன் போது, பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 29 கிராமசேவையாளர் பிரிவுகளிலும் ஒரு பிரிவுக்கு 30 இலட்சம் ரூபா ஒதுக்கீடு என்ற அடிப்படையில் 29 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

இதன்மூலம் அபிவிருத்தி செய்யப்படவுள்ள உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரம் போன்ற வேலைத்திட்டங்கள் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

இதில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் ,பிரதேச செயலாளர் ஜெ. லியாகத் அலி, கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜவ்பர், சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ் உட்பட திணைக்களத்தின் தலைவர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply