
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை முதற்கட்டமாக பெற்றுக் கொண்டவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் இரண்டாம் கட்ட தடுப்பூசியை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், “போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.
இந்த பாதிப்புக்களிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும்.
அத்தோடு நாட்டில் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட சுமார் 6 இலட்சம் பேருக்கு இரண்டாம் தடுப்பூசி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இம்மாத இறுதிக்குள் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்றார்.