வவுனியாவில் குறைந்தளவான மாணவர்களை உள்ளடக்கிய பாடசாலைகளை திறக்க நடவடிக்கை!

வவுனியாவில் குறைந்தளவான மாணவர்களை உள்ளடக்கிய 114 பாடசாலைகளை விரைவாக திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக வவுனியா மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார்.

கொவிட் சமகால நிலமை தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில்  வவுனியாவில் கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. அதனை கருத்தில் கொண்டு குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

அந்தவகையில் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 72 வீதமானவர்களுக்கு இரு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது. 29-59 வயதான 58 வீதமானவர்களுக்கு இரு தடுப்பூசிகளும், 18-29 வயதுக்குட்பட்ட 28 வீதமானவர்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோசும் செலுத்தப்பட்டுள்ளது. இந்தமாத இறுதிப்பகுதிக்குள் முழுமையாக தடுப்பூசிகளை வழங்குவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

இதுவரை வவுனியாவில் 7125 பேர் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 200 பேர் சாவடைந்துள்ளனர். இறந்தவர்களில் 70 வீதமானவர்கள் 60 வயதுக்கு மேற்றப்பட்டவர்கள்.

அத்துடன் தடுப்பூசிகளை பெறாத முதியவர்களுக்கு அதனை வழங்குவதற்கான விசேட ஏற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 200 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட 114 பாடசாலைகள் உள்ளது. அவற்றை திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரண்டு டோஸ்  தடுப்பூசியினையும் செலுத்தி அட்டைகளை வைத்திருப்போரை மாத்திரம் பிரதேச செயலகத்திற்குள் உள்வாங்கி சேவைகளை வழங்குவதுடன் ஏனையவர்களை அலுவலகங்களிற்கு வெளியில் வைத்து சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை செய்வதற்கான முன்மொழிவொன்றை வவுனியா பிரதேச செயலாளர் வழங்கியிருந்தார். ஆயினும் அது தொடர்பாக தீர்மானம் எவையும் எடுக்கப்படவில்லை

அத்துடன் தடுப்பூசி செலுத்தாமல் வெளியில் நடமாடுவோர் மீது சுகாதாரபிரிவினரது பங்களிப்புடன் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பது தொடர்பான முறைமை ஒன்றை உருவாக்குதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. எனினும் தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை” என்றார்.

Leave a Reply