பண்டாரகம அட்டுலுகமவில் ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரின் உடலின் பல பாகங்களிலும் நகக் கீறல்கள் காணப்படுகின்றன எனவும் அவரின் வீட்டின் படுக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சேறும் கதியுமான சாரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸரால் தெரிவிக்கப்படுகிறது.
இவர் கீரைத் தோட்ட தொழிலாளி எனத் தெரிவிக்கப்படுகிறது.
குற்ற விசாரணை திணைக்களம் மற்றும் மேலும் ஐந்து பொலிஸ் குழுக்களின் கூட்டு முயற்சியில் இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.
களுத்துறை பண்டாரகம அட்டுலுகம பகுதியில் காணாமற் போன 9 வயதான ஆயிஷா எனும் சிறுமி தனது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு கடந்த 27ஆம் திகதி காலை 10 மணியளவில் கோழி இறைச்சி வாங்கிச் சென்றிருந்தார்.
பின்னர் மறுநாள் அருகிலுள்ள சதுப்பு நிலமொன்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் சுமார் 20 இற்கும் மேற்பட்டோரை விசாரணைக்குட்படுத்தி வாக்குமூலம் பெற்றனர். அத்துடன் போதைப்பொருளுடன் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இந்தச் சிறுமி கோழி இறைச்சியைக் கொள்வனவு செய்து மீண்டும் வீட்டுக்குத் திரும்பும் காடச்ிகள் அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வியில் பதிவாகியிருந்தன.

இந்த நிலையிலேயே சிறுமி காணாமல் போன தினமான காலை 10.15 மணியளவில் சிறுமி பயணித்த வீதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்தே சேறும் கதியுமான சாரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இவர் ஆயிஷாவும் அவரது தாயும் வீட்டில் தனியாக இருந்த வேளை, இரவுவேளையில் வீட்டுக்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தமை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

